24 ஆகஸ்ட், 2009

உலகின் மிகப்பழைமையான காதல் கவிதை !



சூடேற்றும் வரிகளுடன் தொடங்கும் இந்த கவிதைதான் உலகில் இதுவரை நாமறிந்த காதல் இலக்கியங்களிலேயே மிகவும் பழமையான படைப்பு. இன்றைய ஈராக்கில் - அன்றைய மெசபடோமியாவின் நிப்பூர் என்ற நகர் இருந்த பகுதியில்- 1880 இல் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு டேப்லட்டில் இந்த கவிதை காணப்பட்டது.

அது சுமேரியர்களின் மொழியில் கியூனிபாஃர்ம் எனப்படும் ஆதிகால வரிவடிவத்தில் எழுதப்பட்டது. இப்போது இப்போது துருக்கியில் இஸ்தான்புல் மியூசியமான The Museum of the Ancient Orient இல் இருக்கிறது.

பண்டைய சுமேரிய மாநகரமான ஊர் என்ற நகரில் கிறிஸ்து பிறப்பதற்கு 2030 ஆண்டுகளுக்கு முன் இதை எழுதிய ஒரு கவிதாயினி 4000 நம்மை அசரவைக்கிறார்!
முதலில் அந்த கவிதையைப் படியுங்கள், பிறகு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்கிறேன்.

முழு கவிதை இதோ:

மணவாளனே,
என் நெஞ்சிற்கினியவனே,
பெரும்பேரழகன் நீ,
தேனைப் போன்று இனியவனே…

மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.

நீயே என்னைச் சிறைப்படுத்தினாய்.
உன் முன் நான் நடுங்குற்று நிற்கக்கடவேன்.
மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.
சிங்கமே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.

மணவாளனே,
என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.
அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.

படுக்கையறையில், தேன் சொட்ட
உன் பெரும்பேரழகை என்னைச் சுவைக்க விடு.

சிங்கமே,
என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.
அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.

மணவாளனே, உன் இன்பத்தை என்னிடமிருந்து நீ பெற்றாய்.
என் தாயிடம் சொல், அவள் சுவையாகத் தின்னக் கொடுப்பாள்.
என் தந்தையிடம் சொல், அவர் பரிசுகளைக் கொடுப்பார்.

உன் ஆன்மா-
உன் ஆன்மாவை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,
மணவாளனே,
விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.
உன் இதயம்-
உன் இதயத்தை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,
சிங்கமே,
விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.

நீ என்னைக் காதலிப்பதால், நீ என்னை தீண்டி அருள்வாய்.
என் கடவுளே, என் காவலனே, என் ஷூ-ஸின்,
என்லிலின் இதயத்தை சந்தோஷப்படுத்தியவனே,
நீ என்னை தீண்டி அருள்வாய்.

உனது இடம் தேனைப் போன்று சிறந்தது.
உன் கைகளை அதன் மீது வைத்தருள்வாய்.
உனது கையை கிஷ்பான் உடை மீது கொண்டுவருவாய்.
கிஷ்பான் ஸிகின் உடையைப் போல உன் கரங்களை அதன் மீது கிண்ணமாய் குவி்ப்பாய்.

- காமமும் காதலும் ததும்பும் இந்த பாடல்தான் இதுவரை உலக இலக்கியம் கண்ட முதல் காதல் பாடல்.

இந்த டேப்லட்கள் உருவாக்கப்படும் விதம் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். ஈர களிமண்ணை ஒரு சட்டக வடிவில் அமைத்துக்கொண்டு அதன் மீது ஒரு ஸ்டைலஸால் சித்திர எழுத்துக்களான கியூனிஃபார்ம் எழுத்தில் எழுதுவார்கள். பிறகு அந்த களிமண் டேப்லட்டை தீயில் சுடுவார்கள். நம்மூரில் சுடுமண் சிற்பங்களை உருவாக்குவது போல. அந்த சுட்ட சுவடிகள் நெடுங்காலத்துக்கு நிலைத்து நிற்கும்.

அன்றைய சுமேரியத்தில் புனிதத்திருமணம் என்ற விழா நடக்கும். அப்போது சுமேரிய அரசன் சுமேரியர்களின் காதல் மற்றும் யுத்த தெய்வமான இனானாவை ‘திருமணம் செய்துகொள்வான்’. நாட்டின் வளத்தையும் ராஜாவின் ஆண்மையையும் போற்றும் அந்த சடங்கின் ஒரு பகுதியாக இனானாவின் தலைமை பூசாரியாக இருக்கக்கூடிய ஒரு பெண் இனானாவாக தோன்றுவாள். அவனது அழைப்பை ஏற்கும் பெண் பூசாரி ராஜாவோடு படுக்கையை பகிர்ந்துகொள்ள அழைத்து, பாடல் ஒன்றையும் இயற்றி பாடுவாள். ஷூ-ஸின் என்ற ஒரு சுமேரிய மன்னனை வேண்டி அழைத்த ஒரு பெண்ணின் பாடல் தான் நீங்கள் படித்தது.

4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆணாதிக்கத்தை மட்டுமல்ல, பெண்கள் கருத்து வெளிப்பாட்டு சுதந்தரத்தையும் இந்த பாடல் காட்டுகிறது. ஆண்மைக்கு முன் மண்டியிடும் பெண்ணின் உடல் பரிசல்ல இந்த கவிதை. ஒரு குறிப்பி்ட்ட வரலாற்று சூழலுக்குள், தங்களுக்கிருந்த வட்டத்துக்குள்ளும், அந்த பெண் பூசாரி தனது உடலைத்தான் கொண்டாடுகிறாள். மெய் தீண்டும் இன்பத்தை அவள் பகிர்ந்துகொள்கிறாளே ஒழிய, தாம்பாளத்தட்டில் வைத்து ராஜாவுக்கு பரிசாக அளிக்கவில்லை.

சுமேரியர்கள் காதலையும் காமத்தையும் பூடமாக்கிவிடவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். அரசனும் பெண் பூசாரியும் கலந்தால், நாடு செழிப்புறும் என்று நம்பினார்கள்.

காமத்தை வெளிப்படையாக எழுதிவிட்டார்களே என்று தமிழ் பெண் கவிஞர்களைப் பார்த்து சீறிப்பாய்ந்த இன்றைய ஆண் இலக்கியவாதிகள் அவசியம் படிக்கவேண்டிய கவிதை இது. உலகின் ஆதி காதல் கவிதை இவ்வாறு இருப்பது ஒரு வகையில் கவிதை இலக்கிய வரலாறு சுதந்தரமான பெண் எழுத்தாளர்களின் சார்பாக அளிக்கும் நிரந்தர poetic justice!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக